search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணும் பொங்கல்"

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.

    மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

    ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

    இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
    • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


    கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடியே பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

    டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மற்ற கடற்கரை பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகள், பூங்காக்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம்.
    • சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், `பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    தைப் பொங்கல்

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். `உத்தரம்' என்றால் `வடக்கு', `அயனம்' என்றால் `வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.

    புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பொங்கல் விழாவை, `இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனா்.

    சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள்.

    பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்...' என்று கூறி மகிழ்வார்கள்.

    இந்த வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம்:

    காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், மதியம் 12.40 மணி முதல் 1.40 மணிக்குள்.

    • பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன.
    • போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் காவலர்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளுக்கு வருபவர்களுக்கு இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தினமும் 100 ரூபாய் கொடுத்து இங்கு தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி: இரவு நேரத்தில் பெண் போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் எதிரொலியாக அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுமா?

    பதில்: சென்னை மாநகரம் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாகும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் என்று புள்ளி விவரங்களும் கூறுகின்றன. எனவே இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கிகளை கொடுக்க தேவையில்லை.

    கேள்வி: சென்னையில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதே?

    பதில்: போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடமாற்றம் தொடர்பான முதல் பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியாகும்.

    இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

    • மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
    • பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

    சென்னை:

    காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மாயமானால் எளிதில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கையில் பெற்றோரின் செல்போன் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டி விடப்பட்டது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 10 ஆயிரம் குழந்தைகள் கையில் இந்த அட்டை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் தகவல் கொடுத்து குழந்தைகளை குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக 9 தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை விரட்டி அடித்தனர்.

    குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்பதை முக அடையாள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த கேமராவில் சிக்கியவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

    திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • இத்திருக்கோயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் சிறப்பு பெற்ற முருகன் திருத்தலம் ஆகும். தொடர்ந்து ஆறு வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து விளக்கேற்றினால் வீடு, மனை, உத்தியோகம், தொழில், திருமணம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், இத்திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு

    கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் விடியற்காலை முதலே கோவில் வளாகத்தில் வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    இந்நிலையில், இன்று காணும் பொங்கல் மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு

    பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வாகனத்தில் வந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். எனவே, விழாக் காலங்களில் போதிய அளவு போலீசாரை நியமித்து பக்தர்களுக்கு போதிய வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.

    சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    • 3-ம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
    • ஆரோவில் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    வானூர் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இதே பகுதியில் ஆரோபீச் உள்ளது. பொங்கல் திருநாளின் 3-ம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கள் உறவினர், நண்பர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வர். இது தவிர பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை முதல் ஆரோவில் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் ஆரோபீச்சின் அழகை கண்டு ரசித்தனர். இங்கு குளிக்க போலீசார் தடை விதித்திருந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள குளோப் பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விழாக்களின் கொண்டாட்டங்கள் பெரு ம்பாலும் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் இங்கு குவிந்து காணும் பொங்கலை ஆராவாரமாக கொண்டாடினர். மேலும், பஞ்சவடீ ஆஞ்சனேயர் கோவில், பிரத்தியங்கரா காளி கோவிலிலும் குவிந்த பொதுமக்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் கோட்டக்குப்பம், வானூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    பொங்கலிற்கு முதல் நாள் போகி மறுநாள் தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், 4-ம் நாள் கொண்டா டப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களில் குவிவது வழக்கம். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங் களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் சுற்றுலா ஸ்தலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி கடற்க ரையில் இன்று காலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். சூரிய உதயத்தை காண வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.இதேபோல் சொத்தவிளை கடற்கரையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். இதனால் கடற்கரை முழு வதும் கூட்டம் அதிக மாக இருந்தது.மாலை நேரத்தில் கூட்டம் அதிக மாக வரும் என்பதால் அங்கு கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதை யடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அருவியின் மேல் உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.மாத்தூர் தொட்டில் பாலம், வட்டக்கோட்டை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. புதுமண தம்பதியினர் ஏராளமானோர் குடும்பத் தோடு சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் கட்டணம் வாங்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான இன்று அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரிப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறையால் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களே ஏரிச்சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்தனர். கொடைக்கானல் பொதுமக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான போக்குவரத்துக் காவலர்களை அதிக அளவில் நியமிப்பது என்ற கோரிக்கை எட்டாக்கனியாகவே உள்ளது.

    மேலும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் போக்குவரத்துக் காவலர்களை அனுப்பி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம், மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, குணா குகை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட காலமாக அந்தந்த பகுதிகளில் வசூல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் இந்த கட்டணம் வாங்கப்படுகிறது.

    இதன் காரணமாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கி திணறியது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா இடங்களை காண முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டது. எனவே இந்த நடைமுறையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் நகர முடிந்தது. அதிகமான கடைகளும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    அவசரத்துக்கு விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை கூட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு போக்குவரத்து காவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.

    ×